| சில முற்றுப் புள்ளிகள் |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| சேவியர் ஆல் எழுதப்பட்டது |
| திங்கட்கிழமை, 02 ஆகஸ்ட் 2010 00:00 |
![]() முடிவுகள் இல்லாத
முடிவு தேடும் பயணத்தில் நான். சாலைகளின் மீதான பயணமும், சேலைகளின் மீதான சலனமும், பக்கங்களைத் தாண்டி ஓடும் வாக்கியங்களும், வாழ்க்கையில் தங்கி விடும் பாக்கியங்களும், எல்லாம் ஏதோ ஓர் முற்றுப் புள்ளி முனையில் அறையப்பட்டு இறந்து போகின்றன. சிரிப்புகளின் நுனிகளோ, இல்லையேல் கசப்பின் கனிகளோ, எதுவுமே எல்லைகளற்ற எல்லையை கொள்கையாய் கொண்டதில்லை. இன்னும் சிலநாள் இருக்காதா எனும் ஆசைக் கனவுகளை வெளிச்சம் வந்து இழுத்துச் செல்வது இயற்கை தானே ! முடிவு முடிவு தான். தூண்டிலில் சிக்கிய மீன் மீண்டும் ஒருமுறை நீந்த முடிவதில்லை. முடிவு ஆரம்பம் தான்... தூண்டில் மீனின் மரணம் ஆகார தேவையின் ஆதாரமாய் விடிவதுண்டு. முற்றுப் புள்ளிகள் முற்றுப் பெறுவதில்லை என்பதும் முற்றுப் பெறாதவற்றிற்கு முற்றுப் புள்ளிகளே இல்லை என்பதும் இலக்கணங்களில் இல்லை. ஆனாலும் சில இடம் மாறிய புள்ளிகள் கோலத்தின் தூண்கள் போல வரவேற்புக் கம்பளம் விரிப்பதுமுண்டு. நானும் ஆசைப்படுகிறேன், முற்றுப் புள்ளியை மையப்புள்ளியாக்கிய ஓர் வட்டமாய் வாழ. - சேவியர் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


